நோயாளிகளுக்கு தேவையான அளவு சக்கர நாற்காலி வழங்க உத்தரவு
நோயாளிகளுக்கு தேவையான அளவு சக்கர நாற்காலி வழங்க உத்தரவு
ADDED : செப் 13, 2025 12:35 AM
சென்னை:'அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு, 'வீல் சேர்' எனப்படும் சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்யவும்' என, அனைத்து மருத்துவமனை நிர்வாகங்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த காளிதாஸ், 84 வயதான தன் தந்தைக்கு சிகிச்சை பெற, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு, 'வீல் சேர்' தர, மருத்துவமனை ஊழியர்கள் மறுத்ததால், தந்தையை தோளில் சுமந்தபடி அவர் அழைத்துச் சென்றார்.
இதை, அருகில் இருந்தோர் வீடியோ எடுத்து வெளியிட, இச்சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், 'வீல் சேர்' கொண்டு வருவதற்குள், அழைத்துச் சென்றதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டது.
அதேநேரம், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அமர்த்தி, வீல் சேரில் அழைத்துச் செல்ல, பணியாளர்கள் 50 ரூபாய் என, கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், போதிய அளவு 'வீல் சேர் மற்றும் 'ஸ்ட்ரெச்சர்' இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சராசரியாக எத்தனை நோயாளிகள் வருகின்றனர் என்ற கணக்கெடுப்பு உள்ளது.
அதன்படி, வயதானவர்கள், நோய் பாதிப்பில் நடக்க முடியாத நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்' இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேவையான அளவு இல்லாவிட்டால், மருத்துவமனை நிதி அல்லது தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் வாங்கிக் கொள்ளலாம். நோயாளிகளிடம் பணம் பெறும் பணியாளர்களை, பணிநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.