தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!
UPDATED : ஜூலை 14, 2025 06:39 AM
ADDED : ஜூலை 14, 2025 12:07 AM

சென்னை:தமிழகத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்தவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என ஆவேசப்பட்டார். மேலும், 'ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது; அதன் பின்னால் முதல்வர் ஒளிந்து கொள்வது ஏன்' என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நடந்த போலீஸ் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:
திருப்புவனம் அஜித்குமார் சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அவர் குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டார்; அதில், தவறில்லை.
நிவாரணம்
அதோடு சேர்த்து இதையும் பண்ணிடுங்க முதல்வரே. அதாவது, உங்கள் ஆட்சிக் காலத்தில், போலீஸ் விசாரணையில், 24 பேர் இறந்துள்ளனர். அந்த, 24 பேரின் குடும்பத்திற்கும், நீங்கள் தயவு செய்து சாரி சொல்லிடுங்க.
அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் தந்தது போல, 24 பேர் குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுத்துடுங்க.
'சாத்தான்குளம் ஜெபராஜ், பெனிக்ஸ் போலீஸ் நிலைய மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது, தமிழக காவல் துறைக்கு அவமானம்' என்று அன்று அறிக்கை வெளியிட்டீர்கள்.
இன்றைக்கு நீங்கள் சி.பி.ஐ., உத்தரவிட்டதற்கு என்ன பேருங்க. அன்றைக்கு நீங்க சொன்னதும், இன்றைக்கு நடக்கறதும் அதேதான். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது. அதன் பின்னால் ஏன் போய் ஒளிந்து கொள்கிறீர்கள்.
பயமே காரணம்
'அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை, நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நடத்த வேண்டும்' என, த.வெ.க., சார்பில், 'ஸ்ட்ராங்' ஆக கேட்டுஉள்ளோம்.
மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு, அந்த பயம் தான் காரணம். உங்கள் ஆட்சியில் எத்தனை, 'அட்ராசிட்டீஸ்!'
அண்ணா பல்கலை பாலியல் சம்பவம் முதல் அஜித்குமார் கொலை வரை, எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. அப்படி நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும் என்றால், 'நீங்க எதுக்கு; உங்க ஆட்சி எதுக்குங்க முதல்வரே. உங்களுக்கு முதல்வர் பதவி எதுக்குங்க?'
எப்படி கேட்டாலும், உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவது கிடையாது. மேக்சிமம், 'சாரி'மா என்ற பதில் தான் வரும். அப்படி இல்லை என்றால், தெரியாம நடந்துடுச்சும்மா; நடக்கக் கூடாதது நடந்துச்சுமா. 'சாரி' மா என்று பதில் வரும். இந்த வெற்று விளம்பர தி.மு.க., அரசு, இப்போது, 'சாரி' மா மாடல் அரசாக மாறி விட்டது. இப்படி இருக்கும் இயலாமை அரசு செய்த தவறுகளுக்கு பரிகாரமாக, சட்டம், ஒழுங்கை சரி செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் மக்களோடு, மக்களாக நின்று, நாங்கள் சரி செய்ய வைப்போம். த.வெ.க., சார்பில் அதற்காக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு விஜய் பேசினார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிராக, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

