பழநி மடம் நிலம் மோசடி வழக்கு: சிபிசிஐடி எஸ்பி விசாரணை
பழநி மடம் நிலம் மோசடி வழக்கு: சிபிசிஐடி எஸ்பி விசாரணை
ADDED : ஜூலை 17, 2026 09:28 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கோயில் அலுவலர்கள் உட்பட ஐவரிடம் மதுரை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., சஜிதா நேரில் விசாரணை நடத்தி ஆவணங்களை சேகரித்தார்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக பழநி முருகன் கோயில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கோயில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த நிலம் கடந்த ஆண்டு பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில் ஜூலை 6-ல் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் இருவருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழநி கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோயில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழநி அடிவாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பழநி சார்-பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி டி.கே.என்.புதுாரை சேர்ந்த சேதுபதி ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த மோசடி வழக்கில் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து பழநி அடிவாரம் போலீசிடம் இருந்து வழக்கு விசாரணை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் மடம் நிலம் மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணையை துவக்கினர்.
பழநி முருகன் கோயில் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். அதோடு தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை பார்வையிட்டனர். பின்னர் கோயில் அலுவலர்கள், வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் மதுரை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., சஜிதா நேற்று காலை 9:30 மணிக்கு திண்டுக்கல் நேருஜி நகரில் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு வந்தார். நில மோசடி தொடர்பாக புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, கண்காணிப்பாளர் சிவநேசன், கோயில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சின்னச்சாமி திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து ஐவரிடமும் எஸ்.பி., சஜிதா நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார். இதற்கிடையில் ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சஞ்சய்காந்தியை வரவழைத்து மடத்துக்கு உரிய நிலம் சம்பந்தமான ஆவணங்களை பெற்றனர்.
அதே நேரம் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐவர் அடங்கிய குழுவினர் பதிவேடு அறையில் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள், கணினியில் இருக்கும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்த நாளில் வந்து சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
பழநி மடம் நிலம் மோசடி தொடர்பாக இரு நாட்களாக திண்டுக்கல், பழநியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்துகின்றனர். எஸ்.பி., சஜிதா திண்டுக்கல்லில் நேரடியாக முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். முதற்கட்டமாக இம்மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகமுள்ள நிலையில் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
