கள ஆய்வு கூட்ட அடிதடிகளால் அதிர்ச்சி பொதுக்குழுவில் எதிரொலிக்க பழனிசாமி தடை
கள ஆய்வு கூட்ட அடிதடிகளால் அதிர்ச்சி பொதுக்குழுவில் எதிரொலிக்க பழனிசாமி தடை
ADDED : நவ 29, 2024 07:56 PM
கள ஆய்வு கூட்டங்களில் நடந்த அடிதடி சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டிச., 15ல் நடக்கவுள்ள பொதுக்குழுவில், அது எதிரொலிக்காமல் இருக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, முன்னாள் அமை்ச்சர்கள், 10 பேர் குழுவை, பழனிசாமி நியமித்தார். மாவட்டவாரியாக கள ஆய்வு கூட்டங்கள் நடத்தி, டிச., 7க்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டங்களில் நடந்த கள ஆய்வு கூட்டங்கள் கைகலப்பில் முடிந்தன. மதுரையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில், கோஷ்டி சண்டை அரங்கேறியது.
கோவை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, நிர்வாகிகள் சிலர் எழுந்து, 'கட்சி தொடர் தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் கூட, கட்சி ஒற்றுமை குறித்து பேசு அனுமதிக்க மாட்டீர்களா' என, எதிர்ப்பு குரல் எழுப்பினர். இந்த விஷயம், பழனிசாமிக்கு தெரியவந்ததும், அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உட்கட்சி மோதல்கள் குறித்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பெங்களூரு புகழேந்தி கூறுகையில், 'இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லி தான், கள ஆய்வுக் கூட்டத்தில் கலாட்டா நடக்கிறது. இது பொதுக்குழுவிலும் எதிரொலிக்கும். ஜனநாயகம் இன்றி கட்சியை நடத்தி வரும் பழனிசாமிக்கு கட்சி கள நிலவரம் என்னவென்று புரியாமல் இருந்தது. கள ஆய்வுக்கென்று செல்லும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே கலவர ஆய்வாக நடப்பதால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இருந்தாலும், இந்த விஷயம் பொதுக் குழுவுலும் வெடித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இனி, அவர் மட்டும் தன்னிச்சையாக கட்சியை நடத்திச் செல்ல முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் எழுப்பும் கேள்விகளுக்கு கட்சித் தலைமை பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்' என எச்சரித்துள்ளார்.
பொதுக்குழுவில் எந்த சலசலப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில், பழனிசாமி கவனமாக இருக்கிறார். இது தொடர்பாக, மாவட்ட செயலர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கள ஆய்வு கூட்டங்களில் அரங்கேறும் அடிதடி சம்பவங்கள், டிச., 15ல் நடக்கவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திலும் தொடரலாம் என பழனிசாமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, கள ஆய்வுக் கூட்டங்களில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், கட்சி ஒற்றுமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர்கள் யார் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை பொதுக்குழுவுக்கு அழைக்க வேண்டாம் என பழனிசாமி கூறியுள்ளனர்.
எந்த சலசலப்பும் இல்லாமல், பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

