பழனிசாமி ஜோதிடராகி விட்டார் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு
பழனிசாமி ஜோதிடராகி விட்டார் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு
ADDED : அக் 23, 2024 10:52 PM
சென்னை:''தி.மு.க., கூட்டணியில், பல விவாதங்கள் இருக்கலாமே தவிர, விரிசல் எதுவும் இல்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்ல திருமண விழா, சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சென்னையில் மழை என்றால் போதும். உடனே, சேலத்திற்கு சென்று பதுங்குபவர் பழனிசாமி. கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி... இப்படி சேலத்துக்கு சென்று பதுங்குவதுதான் வாடிக்கை. மக்களால் ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி என்றைக்கோ செல்லக்காசாகி விட்டார். ஆனால், போகும் இடமெல்லாம் தி.மு.க., குறித்து அங்கலாய்க்கிறார். தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கிற பொறாமை காரணமாக, 'தி.மு.க., ஆட்சியின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது; தி.மு.க., கூட்டணி விரைவில் உடையப் போகிறது' என, பேசுகிறார்.
இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என, நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, பழனிசாமி கற்பனையை கடந்தவராக மாறி விட்டார். அதாவது ஜோதிடராகவே மாறி விட்டார். ஏன் அப்படி மாறினார் என தெரியவில்லை. விரக்தியின் எல்லைக்கேச் சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க., கூட்டணி என்பது, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி.
எங்கள் கூட்டணிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். அதெல்லாமே ஜனநாயக ரீதியிலானது. அதற்காக, கூட்டணிக்கு குழப்பம் என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை. அப்படி நினைத்தால், அவர்கள் ஏமாந்து போவர்.
எங்கள் கூட்டணியில் நடக்கும் விவாதங்கள் சண்டைகானது அல்ல; வளர்ச்சிக்கானது. அதை விரிசல் என யாரும் தவறாக புரிந்து கொண்டால், புரிந்து கொள்பவர்களின் இயலாமையாகத்தான் பார்க்க முடியும். என்றைக்கும் எங்களுக்கு விரிசல் இருக்காது.
தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் பக்க பலமாக உள்ளனர். அதனால், வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும், தி.மு.க., தான் வெற்றி பெறும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
தமிழகத்தில் மக்களாட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அதனால் இன்றைக்கல்ல; என்றைக்குமே மக்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாகத்தான் இருப்பர். வரும் 2026 தேர்தலோடு பழனிசாமி அரசியல் நிறைவுக்கு வந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.