35,000 போலீசாருக்கு பாதிப்பு; தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
35,000 போலீசாருக்கு பாதிப்பு; தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
UPDATED : ஜூன் 24, 2025 06:32 AM
ADDED : ஜூன் 24, 2025 02:45 AM

சென்னை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி, 35,000 போலீசாருக்கு தி.மு.க., அரசு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காவல் துறையில் சேரும் காவலர்களுக்கு, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, பணியில் சேரும் இரண்டாம்நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகளில், முதல்நிலைக் காவலர்களாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 25 ஆண்டுகளில், எஸ்.எஸ்.ஐ.,யாகவும் பதவி உயர்வு பெறுவர்.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், முதல்நிலைக் காவலராக ஐந்து ஆண்டு பணியாற்ற வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளனர். 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என, 2021 தேர்தலில் தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
தற்போது, இந்தப் புதிய உத்தரவால், 2001 முதல் 2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த 35,000 காவலர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அதிக அளவிலான காவலர்களை பாதிக்கும் இந்த உத்தரவை, தி.மு.க., அரசு திரும்பப்பெற வேண்டும்.
பணியில் உள்ள காவலர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், 20 ஆண்டு பணிமுடித்த காவலர்களுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.