மக்கள் பிரச்னையை பேச முடியவில்லை சட்டசபைக்கு வெளியே பழனிசாமி ஆதங்கம்
மக்கள் பிரச்னையை பேச முடியவில்லை சட்டசபைக்கு வெளியே பழனிசாமி ஆதங்கம்
ADDED : டிச 10, 2024 07:47 PM
சென்னை:''மத்திய அரசுக்கு, தமிழக அரசு எழுதிய கடிதத்தில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தவில்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபைக்கு வெளியே, அவர் அளித்த பேட்டி:
'டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தனி தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்தார். அ.தி.மு.க., சார்பில் எங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்தோம். அதற்கு, உண்மைக்கு புறம்பான கருத்தாக, ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக பேசியதாக, முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதற்கு, தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். அவர் மதுரை மாவட்டம், மேலுாரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, ஆதரவு அளிப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த, கனிம சுரங்க ஒதுக்கீட்டில், பெரிய ஊழல் நடந்தது. அதனால், ஏலமுறை கொண்டு வரப்பட்டதை, தம்பிதுரை ஆதரித்து பேசினார். அதில் என்ன தவறு உள்ளது.
தமிழக நீர்வளத் துறை அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமையை, மாநில அரசுக்கே வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அரிய வகை கனிமங்கள் ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்; கனிம சுரங்கங்கள் விதிகள் திருத்த சட்டம் 2023ஐ திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மேலும், மதுரை மாவட்டத்தில், 'டங்ஸ்டன்' சுரங்கம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தவில்லை. இவர்கள் செய்த தவறை மறைக்க, எங்கள் மீது பழி சுமத்தியது கண்டிக்கத்தக்கது.
ஐந்து நாட்கள் வரை நடக்க வேண்டிய, மழைக்கால கூட்டத்தொடரை, இரண்டு நாட்களில் முடித்து விட்டனர். தமிழகத்தில் ஏராளமான பிரச்னை உள்ளது. அனைத்து கட்சியினரும், மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை. பிரதான கட்சிக்கே, 10 நிமிடம் தான் ஒதுக்குகின்றனர். தி.மு.க., அரசு வந்தபின், மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.