பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துங்கள் மா.செ.,க்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்
பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துங்கள் மா.செ.,க்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்
ADDED : ஜன 10, 2024 01:30 AM
சென்னை:'தேர்தல் கூட்டணி குறித்து கவலை வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்தல் பணிகளை துவக்குங்கள். தொடர்ச்சியாக பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துங்கள். பொதுமக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்துங்கள்' என, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அவர் பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ளன. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். தேர்தல் பணிகளை உடனே துவக்குங்கள். கூட்டணி இல்லையே தேர்தல் முடிவு எப்படி அமையுமோ என, சிலர் பதற்றமாக கேட்பது புரிகிறது. கூட்டணி குறித்த கவலை உங்களுக்குத் தேவையில்லை. அதை பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு.
நீங்கள் தேர்தலுக்காக தயாராகும் வேலையை மட்டும் பாருங்கள். இம்மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில் தகுதியான நபர்கள் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனரா எனப் பாருங்கள். நம் ஆதரவு வாக்காளர்களை நீக்க, தி.மு.க., முயற்சிக்கும்; அதை அனுமதிக்காதீர்கள்.
அனைத்து பகுதிகளிலும், பொதுக்கூட்டம், தெரு முனைக் கூட்டங்கள் நடத்துங்கள். நம் ஆட்சி சாதனைகளையும், தி.மு.க., ஆட்சி அவலங்களையும், மக்களிடம் எடுத்துரையுங்கள். சென்னை, தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டங்கள் நடத்த வேண்டும். எனவே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும், என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இந்தப் பணிகளோடு கட்சி நிர்வாகிகள் கூட்டம், பூத் கமிட்டி கூட்டங்களை நடத்துங்கள். அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என, பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
இவ்வாறு, கூறினர்.
காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், 12:00 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின், நிர்வாகிகள் பழனிசாமியை தனியே சந்தித்து பேசினர். திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்ட செயலர்களை, வீட்டில் வந்து சந்திக்கும்படி, பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

