பின்னலாடை தொழில் சிறக்க நடவடிக்கை: தொழில்துறையினரிடம் பழனிசாமி வாக்குறுதி
பின்னலாடை தொழில் சிறக்க நடவடிக்கை: தொழில்துறையினரிடம் பழனிசாமி வாக்குறுதி
ADDED : செப் 12, 2025 11:22 PM

திருப்பூர்; ''பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் பின்னலாடை தொழில் சிறக்க நடவடிக்கை எடுப்போம்,'' என, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசினார்.
பிரசார பயணமாக திருப்பூர் வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தொழில் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், நேற்று கலந்துரையாடினார். அதில், தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து, 27 அமைப்பினர், கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், பழனிசாமி பேசியதாவது:
'டாலர் சிட்டி' என்று பெருமையாக அழைக்கப்படும் திருப்பூர், இன்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது. நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் வளர வேண்டும்; லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.தொழில் சீராக இருந்த போது, அமெரிக்க அதிபர், 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளதால், தொழில் சரிவை சந்திக்கிறது.இதுகுறித்து தெரியவந்ததும், பிரதமர் மற்றும் மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினோம்.
தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், எம்.பி.,க்கள் ஏன் மவுனம் காக்கின்றனர் என்று தெரியவில்லை.பனியன் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள், மின் கட்டண உயர்வு, வரி உயர்வு பிரச்னைகளுக்கு தீர்வு காண, நாங்களும் குரல் கொடுப்போம். பனியன் தொழில் சரிந்துவிட்டால், சரிசெய்ய நீண்ட காலமாகும்.விவசாயமும், தொழில் வளர்ச்சியும், வண்டியின் இரு சக்கரங்களை போன்றது; யாருக்கும் இழப்பு ஏற்படாத வகையில், அ.தி.மு.க., ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வெளியே நகரும் தொழில் திருப்பூர் பனியன் தொழிலில் வேலை வாய்ப்பு பெருகும் என்பதால், பல்வேறு மாநில அரசுகள், அதிகபட்ச சலுகை வழங்கி, தொழில்துவங்க வருமாறு அழைப்பு விடுத்துவருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் தொழிலும் புலம்பெயர்ந்து விடும் என்று, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, திருப்பூர் பின்னலாடை தொழில், வெளிமாநிலங்களுக்கு நகராமல் பாதுகாப்போம். தொழிலாளர் தங்கும் விடுதி வசதி உள்ளிட்ட திட்டம் செயல்படுத்தப்படும்.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் பின்னலாடை தொழில் சிறக்க நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஒரு நிமிடத்தில் நிருபர்கள் வெளியேற்றம்
பழனிசாமி பொள்ளாச்சியில் விவசாயிகளை சந்தித்த போது, கள் இறக்குவது தொடர்பாக விவசாயி ஒருவர் பேசி, சமூக வலைதளங்களில் பரவிவிட்டது. இதன் காரணமாக, திருப்பூரில் நேற்று நடந்த தொழில் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் சந்திப்பில், பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து நிமிடங்களில், போட்டோ, வீடியோ எடுத்து செல்ல வேண்டுமென முன்னறிவிப்பு செய்திருந்தனர்.
பழனிசாமி வந்ததும், 'மைக்'கை கையில் பிடித்து, பேசுவது போல் 'போஸ்' கொடுத்தார். ஒரே நிமிடத்தில், நிருபர்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்கு பிறகு வந்த தொழில் அமைப்பினரும், விவசாயிகளும் கூட அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை.

