46 பிரச்னைகளை கண்டுபிடிக்க 4 ஆண்டுகள் முதல்வரை கிண்டல் செய்த பழனிசாமி
46 பிரச்னைகளை கண்டுபிடிக்க 4 ஆண்டுகள் முதல்வரை கிண்டல் செய்த பழனிசாமி
ADDED : செப் 05, 2025 03:41 AM

வாடிப்பட்டி: 4 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்திருக்கிறார். பிரச்னையை தீர்க்கத்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள். இவர் இப்போது தான் பிரச்சனை இருப்பதையே கண்டுபிடித்திருக்கிறார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம்,தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தில் 4வது நாளான நேற்று மாலை சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டியில் அவர் பேசியதாவது: சோழவந்தான் தொகுதி வேளாண் மக்கள், விவசாய தொழிலாளர் நிறைந்த பகுதி நானும் விவசாயி தான்.
வெயில், மழை பாராமல் கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினோம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம்.
குடிசை வீடுகளில் வசிக்கும் விவசாய தொழிலாளர்கள் ஏழை, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு அ.தி.மு.க., அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.
தி.மு.க., என்பது குடும்ப ஆட்சி. மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளது.
ஸ்டாலின் திட்டத்தை அறிவிப்பார்,பெயர் வைப்பார். பெயர் சூட்டுவதில் மட்டும் சிறந்த முதல்வர். இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவித்துள்ளார்.
என்ன குறை என்று கேட்டு குறையை தீர்ப்பாராம்.
4 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார். பிரச்னையை தீர்க்கதான் முதல்வரை தேர்வு செய்வார்கள்.
ஆனால் இவர் இப்போது தான் பிரச்சனை இருப்பதையே கண்டு பிடித்திருக்கிறார்.
மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி தி.மு.க.
2026ல் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தி.மு.க.,ஆட்சிக்கு வந்த பிறகு ஜல்லிக்கட்டுக்கு 'டோக்கன் சிஸ்டம்' கொண்டு வந்து விட்டனர். உள்ளூர் காளைகளுக்கு அதில் இடமில்லை. தி.மு.க.,வினருக்கு வேண்டியவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்ற கட்சி தி.மு.க.,
அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பிறகு ஜல்லிக்கட்டு நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் 'பை,பை' ஸ்டாலின். இவ்வாறு பேசினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர் பழனிசாமிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, வெள்ளி செங்கோல், குத்துவிளக்கு நினைவு பரிசாக வழங்கினர்.
முன்னதாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வரவேற்றனர்.