அ.தி.மு.க.வின் அலங்கார தேவதை பழனிசாமி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
அ.தி.மு.க.வின் அலங்கார தேவதை பழனிசாமி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
ADDED : அக் 12, 2025 11:04 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''அ.தி.மு.க.,வில் உள்ளே இருந்தும், வெளியில் இருந்தும் தரும் சூழ்ச்சிகளை முறியடித்து கட்சியை காப்பாற்றும் அலங்கார தேவதையாக பழனிசாமி உள்ளார்'' என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒரு சாமானியான பழனிசாமி அ.தி.மு.க., விற்கு பொதுச் செயலாளராக இருப்பதால் வழக்கு மேல் வழக்கு போட்டனர். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மாவும், மக்களின் அன்பும் இருந்ததால் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புகள் கிடைத்தது.
ஆனாலும் அவரை எதிரிகள், துரோகிகள் விரட்ட வேண்டும், கெடுக்க வேண்டும் என செயல்படுகின்றனர். அத்தனை சூழ்ச்சிகளையும், பிரச்னைகளையும் கடந்தும் அவற்றை தகர்த்து எறிந்து அ.தி.மு.க.,வை காப்பாற்றும் அலங்கார தேவதையாக பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அவர் ஒரு சூப்பர் ஸ்டாரோ, சுப்ரீம் ஸ்டாரோ கிடையாது. ஆனாலும் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. வரும் தேர்தலில் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பழனிசாமியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.