ADDED : மே 20, 2025 06:25 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
அரக்கோணத்தில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகி தெய்வசெயல் என்பவர், கல்லுாரி மாணவியை ஏமாற்றி, பிற தி.மு.க., 'சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதியாமல், தி.மு.க., அரசின் காவல் துறை அலைக்கழித்துள்ளது. அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே, எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது.
'பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி' என அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, மேடைதோறும் முழங்கிய முதல்வர் ஸ்டாலினின் அலங்கோல ஆட்சிக்கு, அரக்கோணமே சாட்சி.
பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக, முதல்வரே உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பெயரை சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார்.
குறிப்பாக, அமைச்சர் மகேஷின் உதவியாளர் உமா மகேஸ்வரன் என்பவருக்கு, தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த துடிக்கும் தி.மு.க., நிர்வாகி மீது, 'டம்மி அப்பா' அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைக் கண்டித்து, நாளை காலை 9:30 மணியளவில், அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

