பின்னலாடை தொழிலை காப்பாற்றுங்கள் மோடிக்கு பழனிசாமி கடிதம்
பின்னலாடை தொழிலை காப்பாற்றுங்கள் மோடிக்கு பழனிசாமி கடிதம்
ADDED : ஆக 31, 2025 05:44 AM

சென்னை : 'திருப்பூர் பின்னலாடை தொழிலை காப்பாற்றுமாறு பிரதமருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், தமிழகத்தின் மிக முக்கியமான, பொருளாதார உயிர்நாடி. திருப்பூரில் உள்ள நிறுவனங் கள், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்குகிறது.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரில் உள்ள 60 சதவீதம் பங்களிக்கிறது. பருத்தி நுால் விலையில், நிலையற்ற தன்மை, உற்பத்தி செலவு அதிகரிப்பால், இத்தொழில் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பு, ஏற்கனவே, நலிவடைந்த நிலையில் உள்ள குறு, சிறு, நடுத்தர பின்னலாடை, தொழில் நிறுவனங்களின் நிலையை, மேலும் மோசமாக்கி உள்ளது.
அமெரிக்கா இல்லாமல், வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்க, மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். அதே நேரத்தில், உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஊக்கத்தொகை வழங்குதல், பருத்தி நுால் மீதான வரியை குறைத்தல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை குறைக்க, கடனை திருப்பி செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு தள்ளிவைத்தல், அமெரிக்காவை தவிர மற்ற சாத்தியமான நாடுகளுக்கு, ஜவுளி ஏற்றுமதியை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

