பஞ்., ஆபீசில் துணைத்தலைவர் மது குடித்த வீடியோவால் அதிர்ச்சி
பஞ்., ஆபீசில் துணைத்தலைவர் மது குடித்த வீடியோவால் அதிர்ச்சி
ADDED : நவ 05, 2024 12:26 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் பஞ்., ஆபீசில், தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., துணைத்தலைவர் கார்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமைகளில், பஞ்., தலைவர் இருக்கையில் அமர்ந்து, தன் நண்பர்களுடன் மது குடித்து கும்மாளமாக இருந்து வருகிறார்.
இதை அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் எச்சரித்தும் கேட்கவில்லை.
நேற்று முன்தினம் நண்பர்களுடன் அவர் மது குடித்த வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது. அவரிடம் பொதுமக்கள் கேட்டால், 'நான் அப்படிதான் செய்வேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்' என, கூறியுள்ளார்.
இது தொடர்பாக, துணைத்தலைவர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''நாம் தமிழர் கட்சியினர் நன்கொடை கேட்டனர். நான் கொடுக்க மறுத்ததால் இதுபோல் சித்தரித்துள்ளனர்,'' என்றார்.
ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜியிடம் விசாரித்தபோது, ''இது தொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், பஞ்., துணைத்தலைவர் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

