'நீக்கம் எதிர்த்த மனு நிலுவையில் இருப்பதால் உறுப்பினராக பன்னீர் உரிமை கோர முடியாது'
'நீக்கம் எதிர்த்த மனு நிலுவையில் இருப்பதால் உறுப்பினராக பன்னீர் உரிமை கோர முடியாது'
UPDATED : மார் 19, 2024 03:03 AM
ADDED : மார் 19, 2024 02:59 AM

சென்னை : 'நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதால், கட்சியின் உறுப்பினராக, ஒருங்கிணைப்பாளராக, பன்னீர்செல்வம் உரிமை கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், பொதுச்செயலர் என்ற முறையில் தன் பணியில் குறுக்கிட பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கவும், கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கவும்கோரியிருந்தார்.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
கட்சி விதிகளில், கொடியின் நிறம், அளவு, வடிவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள், அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் செல்லாது என, இதுவரை எந்த நீதிமன்றமும் கூறவில்லை.
குறுக்கிட முடியாது
தீர்மானத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, கட்சியில் உறுப்பினராக நீடிக்கிறேன்; கொடி, சின்னத்தை பயன்படுத்துவேன் என்று பன்னீர்செல்வம் கூற முடியாது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிடும் வரை, பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலரின் நடவடிக்கையில், பன்னீர்செல்வம் குறுக்கிட முடியாது. தமிழக முதல்வராக மூன்று முறை பன்னீர்செல்வம் இருந்துள்ளார்.
அ.தி.மு.க.,விலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். கட்சி சின்னம், கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த அவரை அனுமதித்தால், பொதுச்செயலரின் நடவடிக்கையில் அவர் குறுக்கிட்டால், கடுமையான குழப்பத்துக்கு வழிவகுக்கும்.
எனவே, வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, அடிப்படை உறுப்பினராக, ஒருங்கிணைப்பாளராக நீடிக்கும் உரிமை பன்னீர்செல்வத்துக்கு வராது; தீர்மானம் செல்லாது என்றும் கூற முடியாது.
உறுப்பினர் நீக்கத்தில் நீதிமன்றம் குறுக்கிடாத வரை, வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, அடிப்படை உறுப்பினராக, ஒருங்கிணைப்பாளராக, பன்னீர்செல்வம் உரிமை கோர முடியாது.
குழப்பம் ஏற்படும்
தனது அணிக்கோ, வேறு புதிய அணிக்கோ தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறிக்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கோருவதால், கண்டிப்பாக கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படும்.
எனவே, பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கவில்லை என்றால், குழப்பத்துக்கு வழி வகுக்கும். அதனால் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியாது. அதனால், மனுதாரர் கோரியபடி உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

