தி.மு.க., அரசின் திறமை இன்மை பன்னீர்செல்வம் விமர்சனம்
தி.மு.க., அரசின் திறமை இன்மை பன்னீர்செல்வம் விமர்சனம்
ADDED : நவ 16, 2025 12:38 AM

சென்னை: 'மேகதாது அணை வழக்கில், வலுவான வாதங்களை, தி.மு.க., அரசு முன் வைக்கவில்லை' என, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
மேகதாது அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை, ஆணித்தரமாக வைத்திருக்க வேண்டும்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், தமிழகத்துக்கு எதிராக, கர்நாடகாவின் முந்தைய நிலைப்பாடுகளை, தி.மு.க. அரசு பட்டியலிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், மேகதாது அணை குறித்து, விரிவான திட்ட அறிக்கையை பரிசீலனை செய்ய, உச்ச நீதிமன்றம் நிச்சயம் உத்தரவிட்டு இருக்காது.
தி.மு.க., அரசின் திறமையின்மை; வலுவான வாதங்களை முன்வைக்காததன் காரணமாக, மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை குழு ஆகியவற்றின் வல்லுநர்கள் பரிசீலிக்கும் சூழ்நிலை, உருவாகி உள்ளது.
இது, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. முதல்வர் ஸ்டாலின், தனி கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 'மேகதாது அணை தொடர்பாக, சீராய்வு மனுவை தமிழக அரசு உடனே தாக்கல் செய்ய வேண்டும்.
கர்நாடக அரசின் முயற்சியை, ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்,' என கூறியுள்ளார்.

