மேகதாது அணை விவகாரம் அப்போதே நிறுத்தி விட்டோம் காங்கிரசுக்கு பன்னீர் பதில்
மேகதாது அணை விவகாரம் அப்போதே நிறுத்தி விட்டோம் காங்கிரசுக்கு பன்னீர் பதில்
ADDED : நவ 17, 2025 01:23 AM

மதுரை: 'மேகதாது அணை விவகாரத்தை அப்போதே நிறுத்தி விட்டோம்' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடக காங்., அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தண்ணீரை தேக்கும் தீவிரத்தில் இருக்கிறது.
அதனால், அவ்விஷயத்தில் கவனமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு எடுத்துச் சொல்லி இருந்தேன்.
இதற்காக, ஜெயலலிதா ஆட்சி காலத்தில், காவிரி பிரச்னையில், தமிழகத்தின் உரிமையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டதையும் எடுத்துக்காட்டியிருந்தேன்.
ஆனால், இதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் சரியான வாதங்களை முன் வைக்கவில்லை.
கர்நாடக காங்., முதல்வர் சித்தராமையாவிடம், கூட்டணி கட்சித் தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி, நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்; தமிழகத்துக்கு விரோதமான கருத்துகளை தெரிவிக்கும் சித்தராமையாவை கண்டிக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தேன்.
ஆனால், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தேனாறும் பாலாறும் ஓடியதா' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவர் இப்படி பேசக்கூடாது. மற்றபடி, மேகதாது அணை விவகாரத்தை, நாங்கள் அப்போதே நிறுத்தி விட்டோம். இதை காங்., தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

