நீதிமன்ற வழக்குகளில் நல்ல முடிவு வரும்: பன்னீர்செல்வம்
நீதிமன்ற வழக்குகளில் நல்ல முடிவு வரும்: பன்னீர்செல்வம்
ADDED : பிப் 18, 2025 04:40 AM
சென்னை : அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசுகையில், ''பழனிசாமிக்கு அரசியல் புரிதலும், முதிர்ச்சியும் இல்லை. விரைவில், அ.தி.மு.க., ஒன்றுபடும். பழனிசாமி இறங்கி வரவில்லை என்றால், அவர் இல்லாத அ.தி.மு.க., ஒன்றுபடும்.
''அ.தி.மு.க., ஆட்சி மலர்வதற்கும், ஒன்றுபடுவதற்கும் பன்னீர்செல்வம் எடுக்கும், அனைத்து முயற்சிகளுக்கும், செங்கோட்டையன் துணை நிற்க வேண்டும்,'' என்றார்.
எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன் பேசுகையில், ''கட்சியின் நலன் முக்கியம். அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒருங்கிணைந்த அ.தி.மு.க., வேண்டும். வரும் 24ம்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், முக்கிய அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுவார்,'' என்றார்.
பன்னீர்செல்வம் பேசிய தாவது:
கடந்த, 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தோம். தொகுதி பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சந்தோஷ் ஆகியோர் பேசினர்.
'கடந்த, 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., 84 சட்டசபை தொகுதிகளில், தொகுதிக்கு, 25,000 ஓட்டுகளை பெற்றுள்ளது. எனவே அ.ம.மு.க., உடன் கூட்டணி வைக்கலாம்.
அக்கட்சிக்கு, 10 முதல் 20 சீட்டுகளை ஒதுக்கலாம்' என, அமித் ஷா தெரிவித்தார்.
அதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை. சசிகலாவை அந்த தேர்தலில் எந்த பங்களிப்பும் இல்லாமல் ஒதுங்கி இருக்கும்படி, அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
அவரும் அதை ஏற்று ஒதுங்கி இருந்தார். அதேபோல, தினகரனையும் தேர்தலில் போட்டியிடாமல் வைக்கலாம். அதற்கு பரிகாரமாக, அவர்களுக்கு, 10 வாரிய தலைவர்களை கொடுக்க, உத்தரவாதம் அளிக்க வேண்டும் என, அமித் ஷா பேசினார். அதற்கும் பழனிசாமி சம்மதிக்கவில்லை.
அமித் ஷாவும் இனி பேசி பலனில்லை எனக்கூறிச் சென்றார். தேர்தலில் தோல்வி அடைந்தோம்.
சாதாரண தொண்டரும் பொதுச்செயலராகலாம் என்ற விதியை பழனிசாமி மாற்றினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இன்னும் ஆறு சிவில் வழக்குகள் நடக்கின்றன. பொதுச்செயலர் பதவி விதி திருத்தம் தொடர்பாக விசாரணை நடக்கும். அதில் நல்ல முடிவுகள் கிடைக்கும். நமக்கு நல்ல காலம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

