தாமதமாகும் பரந்துார் விமான நிலைய திட்டம்; கர்நாடகா சென்றது விமான பராமரிப்பு மையம்
தாமதமாகும் பரந்துார் விமான நிலைய திட்டம்; கர்நாடகா சென்றது விமான பராமரிப்பு மையம்
ADDED : ஆக 07, 2025 08:12 AM

சென்னை: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம், விமான பராமரிப்பு துறையில் முதலீட்டை ஈர்க்க பயன்படும் எம்.ஆர்.ஓ., மண்டலம் அமைப்பதிலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், கர்நாடகா பெங்களூரு விமான நிலையத்தில், விமான பராமரிப்பு மையத்தை, 'இண்டிகோ' நிறுவனம் அமைக்கிறது.
நம் நாட்டில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் விமான நிலையத்தில், எம்.ஆர்.ஓ., எனப்படும், 'மெயின்டெனன்ஸ், ரிப்பேர் அண்டு ஆப்பரேஷன்' எனப்படும் விமானங்களின் பழுதுபார்ப்பு, பராமரிக்கும் மண்டலம் உள்ளது.
இதேபோல், எம்.ஆர்.ஓ., மண்டலத்தை, சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பரந்துாரில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், விமான நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க முடியும்.
இந்நிலையில், பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியும் துவங்கப்படவில்லை. இதனால், விமான நிலையம் மற்றும் எம்.ஆர்.ஓ., மண்டலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நம் நாட்டில், விமான பராமரிப்பு மண்டலத்துக்கு தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தும், பரந்துார் விமான நிலையம் மற்றும் எம்.ஆர்.ஓ., மண்டலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில், விமான பராமரிப்பு மண்டலத்தை, 'இண்டிகோ' நிறுவனம் அமைக்கிறது.
பரந்துாரில் எம்.ஆர்.ஓ., மண்டலத்தை அமைக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி இருந்தால், பெங்களூருவுக்கு சென்ற முதலீடு, பரந்துாருக்கு வந்திருக்கும். இனியும் தாமதம் செய்யாமல், பரந்துார் விமான நிலைய திட்டத்தை விரைந்து செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.