ADDED : அக் 14, 2024 09:47 AM
ஒகேனக்கல், : காவிரி ஆற்றின் கர்நாடகா நீர்பிடிப்பு மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. தமிழக எல்லை பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 12,000 கன அடியாக அதிகரித்தது. மாலை, 5:00 மணிக்கு, 20,000 கன அடியாக உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. நேற்று காலை சுற்றுலா பயணியர் காவிரியாற்றில் குளித்து, பரிசல் சவாரி செய்து மகிழ்ந்த நிலையில், மதியம், 1:30 மணிக்கு நீர்வரத்து, 17,000 கன அடியாக மேலும் அதிகரித்தது.
இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால், மதியத்திற்குப் பின் வந்த பயணியர், ஏமாற்றத்துடன் திரும்பினர்.