ADDED : பிப் 11, 2025 07:47 PM
சென்னை:இன்றைய டிஜிட்டல் உலகில், அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளர்கள் தேவைப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
தெலுங்கானா, பீஹார் மாநில அரசுகளால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும்போது, தமிழக அரசாலும் முடியும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை.
பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை, நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறு. இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட்டதற்குதான் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை முதல்வருக்கு அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
இன்றைய 'டிஜிட்டல்' யுகத்தில், தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். கட்சியினருடன் உரையாடவும், சமூக வலைதளங்களில் செயல்படவும் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை, கட்சிகள் பயன்படுத்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

