சோளிங்கரில் வேட்பாளர் அறிவிப்பு: தினகரன் பேச்சால் கட்சியினர் குழப்பம்
சோளிங்கரில் வேட்பாளர் அறிவிப்பு: தினகரன் பேச்சால் கட்சியினர் குழப்பம்
ADDED : மே 03, 2025 01:13 AM

சோளிங்கர:“கூட்டணி கட்சிகளிடம் தொகுதியை கேட்டு பெற்று, கட்சியின் மாவட்டச் செயலர் பார்த்திபனை சோளிங்கர் தொகுதியில் வேட்பாளர் ஆக்குவேன்,” என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேசினார்.
முன்னுக்கு பின்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் ஸ்டாண்டில், அ.ம.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு மே தின பொதுக்கூட்டம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமை வகித்தார்.
பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசுகையில், “எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., என்றைக்கும் ஒன்றுபட்டுதான் செயல்பட வேண்டும்.
''தமிழகத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கிற தீய சக்தி தி.மு.க.,வை அகற்றுவதற்கு, அ.தி.மு.க.,வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
''வரும் 2026 தேர்தலில், கூட்டணி கட்சிகளிடம் பேசி சோளிங்கர் தொகுதியை கேட்டுப் பெறுவேன். அதில், கட்சியின் மாவட்டச் செயலர் பார்த்திபனை வேட்பாளராக்குவேன்.
''காஷ்மீர் மாநிலம், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் கூறுகிறார். இது வேடிக்கையாக உள்ளது. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதையே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
''தமிழகத்தில் கூலிப்படை செயல்பாடு அதிகமாகி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளதால், சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை தைரியமாக வெளியில் நடமாட முடியவில்லை,” என்றார்.
தினகரனின் பொதுக்கூட்ட பேச்சால், அக்கட்சியினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலுக்கு அ.ம.மு.க., எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போகிறது என்பது தெரியாத சூழ்நிலையில், கூட்டணி கட்சியினரிடம் பேசி, சோளிங்கர் தொகுதியில் பார்த்திபனை போட்டியிட வைப்பேன் என, பொதுக்கூட்டம் வாயிலாக தினகரன் தெரிவிக்கிறார்.
புரியவில்லை
ஒருவேளை, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற முடியாமல் போனால், அவர் தனித்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது. எதற்காக, முன்கூட்டியே இப்படியெல்லாம் பேசுகிறார் என புரியவில்லை. ஏற்கனவே நிறைய குழப்பத்தில் இருக்கும் எங்களை, இது மேலும் குழப்புவது போல் உள்ளது.
இவ்வாறு அ.ம.மு.க., வினர் கூறினர்.