ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து
ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து
ADDED : செப் 30, 2025 06:18 AM

சென்னை: ''ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது,'' என, தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு கடல்சார் வாரியம் இயங்கி வருகிறது. இதன், 97வது வாரிய கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் வேலு பேசியதாவது:
சிறு துறைமுகங்கள் வாயிலாக, வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனியார் தொழில் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு சாத்தியமான மாநிலமாக, தமிழகம் உள்ளது.
தமிழகத்தில், 1,069 கி.மீ., கடற்கரை பகுதிகளில், சாத்தியமான இடங்களில் சுற்றுச்சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல், பல்வேறு துறைமுகங்களை உருவாக்கவும், மேம்படுத்தவும் ஆராயப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலுார் துறைமுகத்தை மேம்படுத்தி, 37 ஆண்டுகளுக்கு பின், அதை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது; நிதியுதவியும் கோரப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கடல்சார் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் வாயிலாக, 2024 - 25ம் ஆண்டு, 1.50 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.