'பணிக்கொடை' பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைக்காததால் வருத்தம்; அரசு மீது ஓய்வூதியர்கள் அதிருப்தி
'பணிக்கொடை' பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைக்காததால் வருத்தம்; அரசு மீது ஓய்வூதியர்கள் அதிருப்தி
ADDED : மே 13, 2025 12:44 AM
மதுரை : 'பணிக்கொடைக்கான தொகையை ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைப்பது உட்பட கோரிக்கைகளுக்காக அழைத்துப் பேசாததால் ஓய்வூதியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது, ஓய்வூதியம், கருணைத் தொகை, சேமநல நிதியுடன், 'கம்யூட்டேஷன்' எனும் பணிக்கொடையும் வழங்கப்படுகிறது. இது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒருபங்கு தொகையின், பத்தாண்டுகளின் மொத்த தொகையாக வழங்கப்படும். பின்னர் ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட சதவீத வட்டியுடன் 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்படும்.
வட்டிவீதம் குறைவு
இதனை திரும்பப் பெறும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். பல ஆண்டு களுக்கு முன் பி.எப்., அமைப்பு முதல் வங்கிகள் வரை வட்டிவீதம் அதிகளவில் இருந்தது.இதனால் 15 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்டது. தற்காலத்தில் வட்டிவீதம் குறைந்துவிட்டதால் 10 ஆண்டுகளில் பிடித்தம் செய்யலாம். எனவே குறைக்க வலியுறுத்துகின்றனர்.
அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் கூறியதாவது: முன்பு வட்டிவீதம் 18 சதவீதமாக இருந்தது, தற்போது 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் 10 ஆண்டுகளாக குறைத்துவிட்டன. தமிழக அரசு இதனை கண்டு கொள்ளவில்லை.
அரசு மீது அதிருப்தி
70 வயதை தாண்டியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என தேர்தலின் போது தி.மு.க.,வினர் உறுதி கூறினர். தமிழகத்தில் உள்ள ஓய்வூதியர்களில் 70 வயது முடித்தவர்கள் 70 ஆயிரம் பேர் வரை இருப்பர். அவர்களுக்கு இந்த சலுகை அளிப்பதால் அதிக செலவு வராது. இதுகுறித்து ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் அழைத்துக்கூட பேசவில்லை. அடுத்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் கிடைக்கிறது. அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 வழங்க வேண்டும். இவை தொடர்பாக அரசு அழைத்துப் பேச வேண்டும். இல்லையெனில் ஜூன் 10ல் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் போராட்ட முடிவை எடுப்போம்.
இந்த ஆட்சி அமைய தேர்தலில் ஒரு லட்சம் துண்டுபிரசுரம் வினியோகித்தோம். கொரோனா காலத்தில் சங்கம் சார்பில் அரசுக்கு ரூ.70 லட்சம் வழங்கினோம். இந்த ஒத்துழைப்பு எதையும் அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றனர்.