ADDED : ஏப் 30, 2012 12:34 AM
பெரம்பூர் சங்கீத சபாவிற்கு, தற்போது 81 வயதாகிவிட்டது.
அண்மையில், பெரம்பூர் காஞ்சி காமகோடி சங்கராலய வளாகத்தில் சித்திரை இசை விழா, 10 தினங்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த இசை விழாவில், இளைய தலைமுறையினருடைய சில நிகழ்ச்சிகள் மனம் கவர்ந்தன. அர்ஜுன் சாம்பசிவன் - நாராயணன் சகோதரர்களின் 'கீ போர்டு' இசை நிகழ்ச்சி 'கீ போர்டு' இசைக்கருவியில் இளங்கலைஞர்களான, மாஸ்டர் அர்ஜுன் சாம்பசிவனும், நாராயணனும் துல்லியமாகவும் வாயினால் பாடினால், எவ்வாறு கமக நயங்களை வெளிப்படுத்திப் பாடுவார்களோ, அதே போன்று கமக - நய - வல்லின - மெல்லின அசைவுகளுடன், இக்கருவியைக் கையாண்டது 'பலே' என்று பாராட்ட வைத்தது.
மிகவும் உழைத்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த இரு சகோதரர்களின் இசை ஆர்வம். இருபத்தி நான்கு மணிநேர இசை சிந்தனை, இப்படி இருந்தால் மட்டுமே, இவர்களால் இவ்வளவு சிறப்பாக மனம் கருதுவதை, கைகளில் கொண்டு வந்து வாசிக்க முடிகிறது என்று, பாராட்ட வைத்தது.
அம்சத்வனியின் மதுரமான ஜலசாட்சி(ஆதி) வர்ணமே களை கட்டிய துவக்கமாக இருந்தது. குறிப்பாக, கண நாயகம் (கரஹப்ரியா ஜன்யம் - உபாங்க ராகம் - ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர்) (ஆதி) பஜேஹம் கீர்த்தனத்தில் பிழையேதும் செய்யாமல், துல்லிய சங்கதிகளுடன் நயமாக வாசித்ததை அவசியம் பாராட்டலாம். ஸ்வரக் கோர்வைக் குறைப்புக்கள் கருத்தை கவர்ந்தன.
சுவாதித் திருநாள் இயற்றிய பங்கஜலோசன
(கல்யாணி - மிச்ர சாபு) - மாமவசதா (கனடா) கீர்த்தனங்கள் மதுரமாக இருந்தன. கேட்க, மாஸ்டர் நாராயணனின் பைரவி ராக ஆலாபனை வாசிப்பு படுஜோர். கச்சிதம் - படுநயம். இசை கற்பனைகளில் ஆழம் தெரிந்தது.
பிரதான காம்போதியை, அர்ஜுன் சாம்பசிவன் உழைப்புடன் வாசித்தது சிறப்பாக இருந்தது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய, ஸ்ரீ ரகுவர சங்கதிகளை மதுரமாக விஸ்தரித்து வாசித்தது. நிரவல் - ஸ்வரங்கள் எல்லாமே மன நிறைவை அளித்தன.
இந்த சகோதரர்களுக்கு பக்க வாத்தியங்கள் சீனியர் வித்வான்கள், மேலக்காவேரி தியாகராஜனின் அருமையான, வயலின் வாசிப்பும் மணிக்கொடி சந்த்ர சேகரனின் மிருதங்க வாசிப்பும் - இளம் ஹரிஹர சர்மாவின் கஞ்சிரா வாசிப்பும் நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகை சேர்த்து, இந்த கூட்டணி வெற்றியுடன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
'கீ போர்டு' க்கு இப்படிப்பட்ட இளங்கலைஞர்களால் உயர்ந்த அங்கீகாரமும், அந்தஸ்தும் கட்டாயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை இந்த இசை நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
- மாளவிகா