'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2025 08:33 AM
சென்னை: குறைக்கப்பட்ட பயிர் கடனை மீண்டும் உயர்த்தி வழங்க, 'நபார்டு' வங்கியை அறிவுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாக, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமித் ஷா தலைமையில், டில்லியில் நேற்று அனைத்து மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில், தமிழக அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் பங்கேற்றனர்.
பின், பெரியகருப்பன் அளித்த பேட்டி:
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்குவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதிகள் வந்தால் தான் முடியும். கடந்த, 2023 - 24 வரை, தமிழகத்தில் பயிர் கடன் தர, 'நபார்டு' வங்கி, 4,290 கோடி ரூபாய் வழங்கியது. இந்த தொகையை, அடுத்த நிதியாண்டில், 2,825 கோடி ரூபாயாக குறைத்து விட்டது. இந்தாண்டும் இதே தொகையை தான் அனுமதித்துள்ளது.
எனவே, குறைக்கப்பட்ட நிதியை மீண்டும் உயர்த்தி வழங்க, நபார்டு வங்கியை வலியுறுத்த வேண்டும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளதால், விவசாயிகளுக்கு உதவ கடன் தொகை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால், நபார்டு வங்கி வாயிலாக வழங்கப்படும் கடனை, மத்திய அரசு குறைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.