ADDED : செப் 21, 2011 05:31 AM
கூடலூர் : பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்டிருந்த 'கேபிள் ஆங்கரிங்' சோதனை நடந்தது.
பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக 1979ல் கேரள அரசு புகார் கூறியது. அதனைத் தொடர்ந்து அணையை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு பலப்படுத்தியது. இதில், ஒரு பகுதியாக 'கேபிள் ஆங்கரிங்' மூலம் பலப்படுத்தப்பட்டது. அணையில் மையப்பகுதியில் 95 இடங்களில் 1981ல் 'கேபிள் ஆங்கரிங்' பதிக்கப்பட்டது.
ஆங்கரிங் சோதனை: ஐவர் குழுவின் பரிந்துரையின்படி அணைப்பகுதியில் பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கேபிள் ஆங்கரிங்' பரிசோதனை நடந்தது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த டி.எஸ்.டி. என்ற தனியார் நிறுவனம் சார்பில் அதன் முதன்மை பொறியாளர் சுனில் ரிக்ரா தலைமையில் இச்சோதனை நடந்தது. அணையில் பதிக்கப்பட்டிருந்த 'கேபிள் ஆங்கரிங்' தன்மை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடந்தது. இதன் அறிக்கையை ஐவர் குழுவிடம் ஒப்படைக்க உள்ளனர்.