'செட்டில்மென்ட்' பணியிடங்கள் நிரப்ப வனத்துறைக்கு அனுமதி
'செட்டில்மென்ட்' பணியிடங்கள் நிரப்ப வனத்துறைக்கு அனுமதி
ADDED : டிச 10, 2024 11:57 PM
சென்னை:வனத்துறையில் நில நிர்வாகம் சார்ந்த, 'செட்டில்மென்ட்' பணியிடங்களை, பிற துறை அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வனப்பகுதிகளில் நில அளவை மற்றும் நில நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வன நில செட்டில்மென்ட் பிரிவுகள் உள்ளன.
இங்கு நில நிர்வாக பணிகளுக்காக, சிறப்பு தாசில்தார், வரைவாளர், நில அளவை உதவி ஆய்வாளர், சிறப்பு வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம், 89 பணியிடங்கள் உள்ளன. இதில், நான்கு பணியிடங்களில் வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
மீதியுள்ள, 85 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் இருப்பதால், இதற்காக பணியாளர் தேர்வு தனியாக நடத்தப்படுவதில்லை. நில நிர்வாகத்துறையுடன் பேசி, அயல் பணி அடிப்படையில், பணியாளர்கள் பெறப்படுகின்றனர்.
இந்நிலையில், நில நிர்வாக செட்டில்மென்ட் பிரிவுகளில் உள்ள பணியிடங்களின் அனுமதி காலம் ஏற்கனவே முடிவடைந்ததால், புதிய நியமனங்கள் மேற்கொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறை கோரிக்கை அடிப்படையில், இந்த பணியிடங்களின் அனுமதி காலத்தை, 2025 மார்ச் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நில நிர்வாக செட்டில்மென்ட் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை, வருவாய் துறை வாயிலாக அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்ப, அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டருடன் வனத்துறை அதிகாரிகள் கலந்து பேசி நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.