துணைவேந்தர் ஜாமினை ரத்து செய்ய மனு மாஜிஸ்திரேட் அறிக்கை அளிக்க உத்தரவு
துணைவேந்தர் ஜாமினை ரத்து செய்ய மனு மாஜிஸ்திரேட் அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : ஜன 03, 2024 01:19 AM
சென்னை:சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில் விரிவான அறிக்கை அளிக்க மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகந்நாதன்; விதிகளை மீறி சொந்தமாக பல்கலை தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி அரசு நிதியை பயன்படுத்தி உள்ளார் என்றும் பல்கலை அதிகாரிகளை வைத்து அமைப்பை இயங்கச் செய்தார் என்றும் அவருக்கு எதிராக பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோரும் புகார் அளித்தனர்.
இதையடுத்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜெகந்நாதன் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகந்நாதனுக்கு ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.
''துணை வேந்தருக்கு எதிராக பதிவு செய்த வழக்கில் குற்றத்துக்குரிய தண்டனை 20 ஆண்டுகளுக்கு குறையாதது. இதை மாஜிஸ்திரேட் கவனிக்க தவறி விட்டார்.
''வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது.
அதன் அதிகாரங்களை மாஜிஸ்திரேட் எடுத்துள்ளார். எனவே காவலில் வைக்க கோரியதை நிராகரித்த மாஜிஸ்திரேட் உத்தரவு தவறானது'' என்றார்.
துணை வேந்தர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ''உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்'' என்றார்.
புகார்தாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி ''எங்கள் தரப்பில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து இவ்வழக்கில் நீதிபதி தனபால் நேற்று பிறப்பித்த உத்தரவு:
மாஜிஸ்திரேட் உத்தரவில் 'மோசடி கையாடல் குற்றச்சாட்டு இல்லாததால் அதற்குரிய சட்டப் பிரிவுகளை பரிசீலிக்கவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை ஆஜர்படுத்திய போது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் சொந்த ஜாமினில் மாஜிஸ்திரேட் விட்டுள்ளார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்கவில்லை.
விரிவான உத்தரவை மாஜிஸ்திரேட் பிறப்பித்திருப்பதால் அவரிடம் இருந்து அறிக்கை பெறுவதுதான் உகந்ததாக இருக்கும். பாதிக்கப்பட்டோர் தரப்பையும் கேட்க வேண்டும்.
அவர்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிப்பது உகந்ததாக இருக்காது.
ஏனென்றால் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் கடுமையானவை; தனிமனித சுதந்திரமும் இதில் அடங்கியுள்ளது.
எனவே விரிவான அறிக்கையை சேலம் மாஜிஸ்திரேட் அளிக்க வேண்டும். எதிர்தரப்பினர் பதில் அளிக்க 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை ஜன.12க்கு நீதிபதி தனபால் தள்ளி வைத்துள்ளார்.