வங்கி ஊழியர் விபரம் கேட்ட மனு; அரசு தரப்பு சாட்சிக்கு 'வாரன்ட்'
வங்கி ஊழியர் விபரம் கேட்ட மனு; அரசு தரப்பு சாட்சிக்கு 'வாரன்ட்'
ADDED : அக் 01, 2024 02:51 AM

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிஉள்ளது.
விசாரணை
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்படும் காலத்தில், வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் விபரங்களை கேட்டு, ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மனுதாரர் கோரிய விபரங்கள் வழக்குக்கு தொடர்புடையவை அல்ல' என, கூறப்பட்டு உள்ளது.
ஆஜராகவில்லை
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, ''வங்கி ஊழியர்களின் விபரங்களை கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது. பதில் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருக்கும் காரணங்கள், குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல,'' என்றார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியான, தடய அறிவியல் துறையின் கணினி தடயவியல் பிரிவு உதவி இயக்குனர் மணிவண்ணன், கடந்த முறையும் ஆஜராகவில்லை.
வரும் 10ம் தேதி ஆஜராவதாக, அமலாக்கத்துறைக்கு 'இ - மெயில்' அனுப்பிஇருந்தார்.
இந்த தகவலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது.
உயர் ரத்த அழுத்தம்
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலித்ததில், இந்த வழக்கில் கடந்த விசாரணையில் கூட, சாட்சி ஆஜராகவில்லை. அவரது மருத்துவச் சான்றிதழை பார்க்கும் போது, உயர் ரத்த அழுத்தம், மயக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, போதுமான காரணம் அல்ல.
எனவே, அரசு தரப்பு சாட்சியை ஆஜர்படுத்த, 'வாரன்ட்' பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம், செந்தில் பாலாஜி மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.