UPDATED : அக் 27, 2026 08:48 PM
ADDED : அக் 27, 2026 08:44 PM
சென்னை: தமிழகத்தில், அதிக மின் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து விசாரிக்க, குழு அமைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எம்.காமேஷ் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்ற பின், 100 யூனிட் இலவச மின்சாரத்தை, 200 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. அதன்பின், கடந்த ஒன்றரை மாதங்களாக, மின் கட்டணம், முந்தைய பில்லை விட, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது.
இது சம்பந்தமாக, ஒன்றரை லட்சம் பேர் வரை, புகார் அளித்துள்ளனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத மின் வாரியம், தொடர்ந்து அதிக கட்டணங்களை விதித்து வருகிறது.
இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மின் கட்டணம் விதிப்பதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, குழு ஒன்றை நியமித்து, விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, பொது நல வழக்காக உள்ளதால், அந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட, பதிவுத்துறைக்கு பரிந்துரைத்தார்.
