விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கராத்தே சேர்க்க கோரிய மனு நிராகரிப்பு
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கராத்தே சேர்க்க கோரிய மனு நிராகரிப்பு
ADDED : டிச 15, 2024 02:09 AM
சென்னை:விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், கராத்தே விளையாட்டையும் சேர்க்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, ஆவடியைச் சேர்ந்த கராத்தே வீரரான அருண் பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
அரசுப் பணிகளுக்கான தேர்வில், விளையாட்டு வீரர்களுக்கு, 10 சதவீத ஒதுக்கீடு உள்ளது. கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ஹாக்கி, சிலம்பம், கைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக், பளு துாக்குதல், ஜூடோ, துப்பாக்கிச் சுடுதல், தடகளம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே, இந்த ஒதுக்கீட்டை பெற தகுதி உள்ளது.
இந்தப் பட்டியலில் கராத்தே விளையாட்டை சேர்க்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கராத்தே விளையாட்டையும் சேர்க்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், அரசு வழக்கறிஞர் கார்த்திக் ஜெகநாத் ஆஜராகினர்.
மனுவை தள்ளுபடி செய்த முதல் பெஞ்ச், 'விளையாட்டுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தேவை சேர்ப்பது குறித்த கொள்கை முடிவை, அரசு தான் எடுக்க வேண்டும். இதில், நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என்ற கேள்வி எழவில்லை' என உத்தரவிட்டுள்ளது.