மி.வா., 'நெட்வொர்க் சார்ஜ்' ரத்து செய்ய சேர்மனிடம் மனு
மி.வா., 'நெட்வொர்க் சார்ஜ்' ரத்து செய்ய சேர்மனிடம் மனு
ADDED : மே 15, 2025 01:59 AM
சென்னை:தடை உத்தரவு பெற்றுள்ள ஒரு நிறுவனத்தை தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களுக்கு, 'நெட்வொர்க் சார்ஜ்' கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யுமாறு, மின் வாரிய தலைவரிடம், தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம் மனு அளித்துள்ளது.
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலைகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளனர். அவற்றை அமைத்திருக்கும் உயரழுத்த பிரிவினரிடம் இருந்து, 'நெட்வொர்க் சார்ஜ்' என யூனிட்டிற்கு, 1.04 ரூபாயும், தாழ்வழுத்த பிரிவில், 1.59 ரூபாயும் மின் வாரியம் வசூலிக்கிறது.
இந்த கட்டணத்தை ரத்து செய்ய கோரி, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து, 2024 டிசம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும், அந்த கட்டணத்தை வாரியம் நிறுத்தியது.
இந்நிலையில், கட்டணம் ரத்து தொடர்பாக, ஒரு நிறுவனத்திற்கு எதிராக, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த மின் வாரியம், கடந்த மாதம் தடை உத்தரவு பெற்றது. இந்த உத்தரவை பின்பற்றி, தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் மீண்டும் நெட்வொர்க் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து, தடை உத்தரவு பெற்ற நிறுவனத்துக்கு மட்டும் நெட்வொர்க் சார்ஜ் கட்டணத்தை வசூலிக்குமாறும், மற்ற நிறுவனங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்றும், தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க நிர்வாகிகள், சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, நேற்று மனு அளித்தனர்.