புளிக்கான தரம் மறுநிர்ணயம் கோரி உணவு கட்டுப்பாட்டு கமிஷனில் மனு
புளிக்கான தரம் மறுநிர்ணயம் கோரி உணவு கட்டுப்பாட்டு கமிஷனில் மனு
ADDED : பிப் 01, 2025 10:27 PM
சென்னை:புளியில் விதைகள் உள்ள அளவை, 0.5 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக மறு நிர்ணயம் செய்வது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு, டில்லியில் உள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகளை, தமிழக உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
புளியில் உள்ள விதைகள் கையால் அகற்றப்படுகின்றன. புளியில், 0.5 சதவீதம் விதை இருக்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கையால் எடுக்கப்படுவதால், சில சமயங்களில் நிர்ணயித்த அளவை விட கூடுதல் விதைகள் இருக்கின்றன. இதை கலப்படமாக கருதி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர்.
எனவே, புளியில் விதைகள் உள்ள அளவை, 3 சதவீதமாக மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.
வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் கவர் மற்றும் லேபிளை அச்சடிக்கும் முன், சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சரிபார்த்து கொடுக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
வெல்லம் தரமாக உற்பத்தி செய்தாலும், சில சமயங்களில் வெயில் அதிகம் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால், இனிப்பு அளவு குறைந்து விடுகிறது.
எனவே, வெல்லத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே தர நிர்ணயம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு, டில்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு துறை தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ கமலவர்த்தன ராவை சந்தித்து, மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.