உணவு பாதுகாப்பு விதியில் மாற்றம்: மத்திய அமைச்சர் நட்டாவிடம் மனு
உணவு பாதுகாப்பு விதியில் மாற்றம்: மத்திய அமைச்சர் நட்டாவிடம் மனு
ADDED : செப் 28, 2025 06:29 AM
சென்னை,: 'உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் தமிழக வணிகர்கள் வழங்கினர்.
இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
உணவு தொழிலில் ஈடுபடுவோர், எந்த தேதியில் தொழில் நடத்த உரிமம் வாங்குகிறாரோ, அதிலிருந்து ஓராண்டு முடிந்ததும், உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால், அந்த தேதியில் உரிமத்தை புதுப்பிக்க, பல வணிகர்கள் மறந்து விடுகின்றனர்.
ஏனெனில், பல்வேறு தொழில்களில், ஏப்., முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. இதேபோல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உரிமம் புதுப்பிக்க, ஏப்., முதல் மார்ச் என, மாற்றி அமைக்க வேண்டும்.
பல்வேறு உரிமங்கள் பெறுவதற்கு பதில், ஒரே உரிமம் வழங்க வேண்டும் என, கடந்த 25ம் தேதி டில்லியில், மத்திய அமைச்சர் நட்டாவிடம் மனு அளிக்கப்பட்டது.
மிளகாய், தனியா போன்ற விளை பொருட்களை வாங்கி, வணிகர்கள், மசாலா பொடி தயாரிக்கின்றனர். இந்த பொருட்களில் பூச்சிக்கொல்லி அளவு அதிகம் இருந்தால், வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை, மூலப்பொருட்களாக வாங்குவதால், அதிக பூச்சிக்கொல்லி இருப்பதற்கு, விவசாயிகள் தான் காரணம். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், புளிக்கு தர நிர்ணயம் செய்ய வேண்டும் என வலிறுயுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.