ADDED : ஜன 18, 2025 07:59 PM
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 55 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டன.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் கூறியதாவது:
ஈரோடு கிழக்கில் போட்டியிட விரும்புவோர் தாக்கல் செய்த வேட்பு மனு, நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்த 58 பேரின் 65 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பின், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் 'மைக்' சின்னம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு, இதுபற்றி கடிதம் அனுப்பியுள்ளோம். வரும் 20ல் என்ன சின்னம் ஒதுக்கலாம், அதை எப்படி ஒதுக்குவது என்பது குறித்து தெளிவாக தெரிவிப்பர். அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படும். வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றால், பிரசாரம் செய்ய திட்டமிடும் 48 மணி நேரத்துக்கு முன், தேர்தல் கமிஷனிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். போலீஸ், நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித்துறையிடம் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அப்படியில்லாத விண்ணம் ஏற்கப்பட மாட்டாது. உரிய அனுமதி இன்றி, யாரும் பிரசாரம் செய்யக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.