ADDED : பிப் 11, 2026 06:44 AM

சென்னை: 'சென்னை மற்றும் கோவையில், தனியார் பங்களிப்புடன், செல்லப்பிராணிகள் பூங்கா அமைத்து பராமரிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, தமிழக விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு, மனிதாபிமானத்துடன் விலங்குகளை நடத்துதல் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை மற்றும் கோவையில், தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைத்து, பராமரிக்கப்பட உள்ளது.
இதற்காக, முன் அனுபவம் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதற்கு மட்டும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், நிலம் ஒதுக்கீடு செய்து தரப்படும்.
அந்த இடத்தில், செல்லப்பிராணிகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள், பச்சை புல்வெளிகள், உணவுப் பொருட்கள் சார்ந்த கடைகள், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை, அந்நிறுவனத்தின் சுயநிதியில் உருவாக்கப்படும்.
அதை பராமரிக்கவும், அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை, அரசுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, www.tnawb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விலங்குகள் நல வாரிய முகவரிக்கு, வரும் 26ம் தேதிக்குள் அனுப்பவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

