விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்க திட்டம் உதயநிதி பிறந்தநாள் 27ல் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு
விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்க திட்டம் உதயநிதி பிறந்தநாள் 27ல் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு
ADDED : நவ 05, 2024 07:16 PM
விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், வரும் 27ல் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, எழுச்சி நாளாக, தமிழகம் முழுதும் கொண்டாட, தி.மு.க., இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில், தி.மு.க.,வை தாக்கி, அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். கட்சி செயற்குழுக் கூட்டம், கடந்த 3ம் தேதி, சென்னையில் நடந்தது. அதில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'யார் புதிய கட்சி துவங்கினாலும், தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்கின்றனர். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என, மறைமுகமாக விஜயை சாடினார்.
த.வெ.க., மாநாட்டிற்கு கூடிய கூட்டம் போல, எங்களுக்கும் கூட்டம் வரும் என்பதை காட்ட, முதல்வர் ஸ்டாலின், கோவை மாவட்டத்திலும், துணை முதல்வர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இருவரையும் வரவேற்க, கட்சியினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில், 'நல்லா இருக்கீங்களா தலைவரே' என்ற தலைப்பில், கோவையில் மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், உதயநிதி பங்கேற்ற கட்சி நிகழ்ச்சியிலும், தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி, விஜய் மாநாடு கூட்டத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதேபோல், விஜய் பக்கம் இளைஞர்கள், இளம் பெண்கள் செல்வதை தடுக்க, வரும் 27ம் தேதி உதயநிதியின் 47வது பிறந்தநாளை படு விமரிசையாகக் கொண்டாட, தி.மு.க., இளைஞரணி திட்டமிட்டுள்ளது.
இளைஞர் அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
துணை முதல்வராக, உதயநிதி பொறுப்பேற்ற பின் வரும் பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுதும், பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளோடு கொண்டாட உள்ளோம். விஜய் பக்கம் இளைஞர்கள், இளம் பெண்கள் செல்வதை தடுத்து, அவர்களை உதயநிதி பக்கம் ஈர்க்கும் வகையில், இவ்விழா கொண்டாடப்பட உள்ளது.
தி.மு.க., பூத் கமிட்டிகளில், இதுவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. வரும் 2026 சட்டசபை தேர்தலில், அனைத்து பூத் கமிட்டிகளிலும், இளைஞர்கள், இளம்பெண்கள் இருப்பர்.
அரசு பள்ளிகளில் படித்து, உயர் கல்வியில் சேர்ந்து, மாதம்தோறும் தமிழக அரசு வழங்கும், 1,000 ரூபாய் பெறும் மாணவ-மாணவியர்; தி.மு.க., இளைஞர் அணி நடத்திய, பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்றவர்கள்; மாணவர் அணி சார்பில் துவக்கப்பட்டுள்ள தமிழ் மன்றங்களின் உறுப்பினர்கள்; கருணாநிதி அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவித் தொகை பெற்ற இளைஞர்கள் அனைவரையும், உதயநிதி பக்கம் இழுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி, உதயநிதி பிறந்தநாளை கொண்டாட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் கட்சி மாவட்டச்செயலர்களுக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -