ADDED : மார் 17, 2024 04:33 AM
சென்னை : 'விஸ்வகுரு என, மார்தட்டிக் கொள்ளும்பிரதமர் மோடி, மவுனகுருவாக இருப்பது ஏன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்,
கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு பதில் தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.
அதன் விபரம்:
கடந்த காலத்தில் தி.மு.க., செய்த பாவத்தால் தான், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர் என, பிரதமர் மோடி கூசாமல் பொய் பேசி உள்ளார்.
தி.மு.க., அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழக மக்கள் நன்கறிவர்.
நாட்டின் ஒரு பகுதியை, மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என, நம்பும் அளவுக்குத் தான் பிரதமர் மோடி அப்பாவியாக இருக்கிறாரா?
கச்சத்தீவை மீட்க, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவதையும், சித்ரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?
அதானி நிறுவனத்தின் வர்த்தக நலனுக்காக, இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த மத்திய அரசு, இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்?
படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி விட்டதாக அறிவித்திருக்கிறது இலங்கை அரசு.
இதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக கண்டிக்காதது ஏன்?
இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ., ஆட்சி காலத்தில் ஏற்பட்டது தான், இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழகத்திற்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்கள் என்ன என பதில் சொல்லுங்க பிரதமரே என, தமிழக மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை.
ஆனால், வழக்கமான புளுகுகளும், புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.
விஸ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும், பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்க, தி.மு.க., மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பர். இது அரிதாரங்கள் கலைகிற காலம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

