பா.ஜ., கையெழுத்து இயக்கத்திற்கு போலீஸ் தடை: நடுரோட்டில் தமிழிசைக்கு 2 மணி நேரம் சிறை
பா.ஜ., கையெழுத்து இயக்கத்திற்கு போலீஸ் தடை: நடுரோட்டில் தமிழிசைக்கு 2 மணி நேரம் சிறை
ADDED : ஜூலை 07, 2025 01:15 AM

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்., நகரில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த விடாமல், முன்னாள் கவர்னர் தமிழிசையை போலீசார் தடுத்து சிறை பிடித்ததால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக, தி.மு.க.,வினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
தமிழக பா.ஜ., சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர்., நகர், கே.கே.சாலையில், தமிழிசை தலைமையில், நேற்று காலை 10:00 மணியளவில் கையெழுத்து இயக்கம் நடத்த முயன்றனர்.
இதற்கு அனுமதி பெறவில்லை என, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், தமிழிசை மற்றும் பா.ஜ.,வினரை தடுத்தனர்.
தமிழிசையை சுற்றிவளைத்து நகர விடாமல் சிறை பிடித்தனர். இதனால், பா.ஜ.,வினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'நான் என்ன தீவிரவாதியா; கையெழுத்து பெறாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்' என, கூறிய தமிழிசை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் அதே இடத்தில் நின்றார்; போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார், 'அனுமதி பெற்று கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள்; போலீசார் பாதுகாப்பு அளிப்பர். அனுமதி இல்லாமல் நடத்தும் கையெழுத்து இயக்கத்தை அனுமதிக்க முடியாது. அதனால், கூடியிருக்கும் பா.ஜ.,வினரை கைது செய்ய வேண்டி உள்ளது.
சாலை மறியல்
அதற்கு ஒத்துழையுங்கள்' என்றார். ஆனால், 'கையெழுத்து பெறாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்' எனக் கூறி, தமிழிசை அதே இடத்திலேயே நின்றார். அவரை நகரவிடாதபடி போலீசாரும் அவரை சூழ்ந்து நின்றனர்.
இதையடுத்து, 'தமிழிசையை விடுவிக்க வேண்டும்' என, கே.கே.சாலை மற்றும் அண்ணா பிரதான சாலை சந்திப்பில், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால், அண்ணா பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பகுதிக்கு பா.ஜ.,வினரால் ஏற்பாடு செய்யப்பட்டோர் பெரும் திரளாக கூடினர். அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
அதே சமயம், தமிழிசை மற்றும் பா.ஜ.,வினரை கைது செய்யக்கோரி, தி.மு.க., வட்டச்செயலர் செழியன் தலைமையில், 25க்கும் மேற்பட்டோர், அண்ணா பிரதான சாலையில் மறியல் செய்து கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு எதிராக, பா.ஜ.,வினர் கோஷங்கள் எழுப்பியதால், அந்தப் பகுதி போராட்ட களமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரிடம் சமரசம் பேசிய போலீசார், அங்கிருந்து அவர்களை கலைந்துபோக கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று, அவர்கள் கலைந்து சென்றனர். பின், தமிழிசையை அவரது காரில் ஏற்றி, போலீசார் அனுப்பி வைத்தனர்.
தான் கைது செய்யப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து, ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பா.ஜ.,வினரை சந்திக்கச் சென்றார் தமிழிசை. அவர்கள் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அவர்களோடு பேசினார். பின், கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தமிழிசை அளித்த பேட்டி: ஒரு அரசியல் கட்சி தலைவரை கொடுமைப்படுத்தி, மூன்று மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தனர். நானே ஒரு டாக்டர். மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் வெயிலில் நின்றால், எந்தளவுக்கு உடல்நிலை பாதிக்கும் என்பதை அறிந்தவள்.
கைது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்ட பின்பும்கூட அதை செய்யாமல், வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தனர். தமிழகத்தில் வசதி படைத்த குழந்தைகள், மூன்று மொழிகளை படிக்கின்றனர்.
அதேபோல, அரசு பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு, அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதை வலியுறுத்தித்தான் தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
அமைதியான முறையில் நடந்த கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடக்கக் கூடாது என்பதற்காகவே, தி.மு.க., அரசு போலீசை ஏவி விட்டு, பா.ஜ.,வினருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
அமைதி வழியில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திவிடக் கூடாது என்ற பதற்றத்திலேயே, ஆட்சி மேலிடத்தில் இருப்போர் இப்படி செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
1.5 லட்சம் கையெழுத்து
தமிழக பா.ஜ., சார்பில், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.
இதற்கு, இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவித்து கையெழுத்திட, 'புதிய கல்வி' என்ற வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வினர் நேற்று முதல், வீடுகளுக்கே சென்று, மக்களை சந்தித்து, மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கினர்.
நேற்று ஒரே நாளில் இணையதளம் வாயிலாக, 1.5 லட்சம் பேர் ஆதரித்து கையெழுத்திட்டனர்.