முதல்வர் பயணத்துக்காக போலீஸ் கெடுபிடி ஸ்ரீபெரும்புதூரில் வாகன ஓட்டிகள் அவதி
முதல்வர் பயணத்துக்காக போலீஸ் கெடுபிடி ஸ்ரீபெரும்புதூரில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 16, 2025 07:02 PM

ஸ்ரீபெரும்புதூர்:தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, இந்த இடத்தில் ஓய்வெடுக்க ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.
சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியே ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம், மேவளூர்குப்பம், மண்ணுார் வழியே உளுந்தை கிராமத்திற்கு ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறை முதல்வர் குடும்பம் உளுந்தை கிராமத்துக்கு வந்து செல்லும் போதும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உளுந்தையில் உள்ள தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இதற்காக போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
குறிப்பாக, கண்டெய்னர் லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களை மறித்து, தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைத்தனர். இந்த லாரிகள் 2 மணி நேரத்திற்கு மேல் சர்வீஸ் சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன.
இப்படி கண்டெய்னர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டதால், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பூங்காவில் இருந்து வெளியேறிய லாரிகளும், சிப்காட் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், சிப்காட் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதல்வர் பயணத்துக்காக இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூர்குப்பம் பகுதிகளிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து சென்றன.
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையை நோக்கி சுற்றுலா சென்றவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், போலீசார் கெடுபிடியால் பெரும் அவதிக்குள்ளாகினர்.