கொடைக்கானல் போதை காளான்; ரீல்ஸ்களை கண்காணிக்கும் போலீஸ்
கொடைக்கானல் போதை காளான்; ரீல்ஸ்களை கண்காணிக்கும் போலீஸ்
ADDED : ஜன 14, 2025 01:34 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விளையும் போதை காளானை சுவைப்பது போல் இன்ஸ்டாவில் வெளியாகும் இளைஞர்களின் ரீல்ஸ்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல் உலக சுற்றுலா தளமாக உள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் முழுவதும் இயற்கை அரணால் சூழ்ந்த மலை பகுதிகளாக இருப்பதால் இங்கு போதை காளான்களும் விளைகிறது. இதை உண்ணும் போது அதிக போதை ஏற்பட்டு காலையிலிருந்து மாலை வரை மயக்க நிலையிலே இருக்க நேரிடும். இந்த போதையை அனுபவிப்பதற்காக பல மாநில இளைஞர்கள் மன்னவனுார், கவுஞ்சி, வட்டக்கானல் பகுதிகளில் சட்ட விரோதமாக டென்ட் அமைத்து தங்கி போதை காளானை சாப்பிட்டு மயங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. இந்த காளான்கள் சமைக்காமல் சாப்பிடுவதற்கு கசப்பாக இருப்பதால் அதில் தேனை ஊற்றியும் சாப்பிடுகின்றனர்.
கேரளா இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு வந்து போதை காளானில் தேனை ஊற்றி சாப்பிட்டு பரவச நிலையை அடைவது போல் வீடியோ எடுத்து அதை ரீல்ஸ்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இதை லட்சக்கணக்கானோர் பார்த்து அவர்களும் இதேபோல் இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
உள்ளுர்வாசிகள் சிலர் போதை காளானை ரகசியமாக சேகரித்து அதிக விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். இதுபோன்ற விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைதும் செய்கின்றனர். இருந்தபோதிலும் முழுமையாக தடுக்கமுடியவில்லை. சிலர் சாதாரண காளானை போதை காளான் என பயணிகளிடம் ஏமாற்றி விற்பதும் தொடர்கிறது.
தீவிரமாகும் போதை காளான் கலாசாரத்தை தடுக்க திண்டுக்கல் மாவட்ட போலீசார் இன்ஸ்டாகிராம், சமூக வலைதளங்களில் போதை காளான் தொடர்பாக வீடியோ, ரீல்ஸ்களை வெளியிடும் நபர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

