அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்
அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்
ADDED : பிப் 10, 2025 06:21 AM

சென்னை; 'தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி ரூபாயை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர்' என மத்திய அரசு மீது, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்திற்கு எதிரான, மத்திய பா.ஜ., அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்ததால், அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கிஉள்ளனர்.
தமிழக மாணவர்களுக்கு உரிய 2,152 கோடி ரூபாயை பறித்து வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்கு போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கத்தில், இத்தகைய வலுக்கட்டாயமான செயலை செய்கின்றனர்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும், ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக, மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவிற்கு இரக்கமில்லாமல் நடந்து கொண்டது இல்லை.
தமிழக மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ., என்பது, மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

