முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்த பொன்மாணிக்கவேல் வழக்கு
முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்த பொன்மாணிக்கவேல் வழக்கு
ADDED : அக் 03, 2024 11:08 PM
மதுரை:சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தமிழக காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக பொன்மாணிக்கவேல் பணிபுரிந்தார்; 2018ல் ஓய்வு பெற்றார். சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.
அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால், 2017ல் கைது செய்யப்பட்டனர்.
இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்தனர்.
'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா மனு செய்தார்.
சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டில்லி சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர்.
அவருக்கு உயர் நீதிமன்ற கிளை, 'சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில், நான்கு வாரங்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆக., 30ல் முன்ஜாமின் அனுமதித்தது.
நிபந்தனையை தளர்த்த கோரி உயர் நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் மனு செய்தார். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, அக்., 14க்கு ஒத்திவைத்தார்.