ADDED : பிப் 15, 2024 12:42 AM
சென்னை:சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக எடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, மார்ச் 12க்கு, சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து, வேலுார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். வரும் 19 முதல் 22 வரை, வழக்கு விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொன்முடி தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, வேறு தேதிக்கு விசாரணையை மாற்றும்படி கோரினார். இதையடுத்து, விசாரணையை, மார்ச் 12 முதல் 15 வரை நடத்துவதாக, நீதிபதி அறிவித்தார்.

