சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு
சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு
ADDED : செப் 03, 2012 12:25 AM

தஞ்சாவூர்
: திருச்சி, லால்குடி அருகே, ஆலங்குடி மகாஜனம் கிராமத்திலுள்ள சிதைந்த
சிவன் கோவிலில், சோழர் கால பழமையான நந்தி சிலை கண்டுபிடிக்கப்
பட்டிருக்கிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில், தமிழ்ப்பண்டிதர்
மணிமாறன், சங்க கால புலவர் ஆலங்குடி வங்கனார் பிறந்த ஊர் பற்றி ஆய்வு
செய்துள்ளார்.
அவர் கூறியதாவது: சங்கப்புலவர் ஆலங்குடி வங்கனார்,
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள ஆலங்குடி மகாஜனம் என்ற ஊரில் தான்
பிறந்துள்ளார் என்பதை, பல சான்றுகள் உறுதி செய்கின்றன. வங்கார் எனும்
பட்டப்பெயர் கொண்ட மக்கள், அந்த கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக இன்றும்
வசித்து வருகின்றனர். ஆலங்குடி மகாஜனம் கிராமத்துக்கு, ஆய்வுக்காக சென்ற
போது, சிவன் கோவில் ஒன்று இருந்ததும், அந்த கோவில் கால வெள்ளத்தில் அழிந்து
போனதும் தெரியவந்தது. கோவிலின் நந்தி மண்டபத்தில் அமைக்கப்படும் நந்தி
சிலை ஒன்று, இங்கு காணப்படுகிறது; இந்த சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்தது.
தற்போது, பழுதடைந்து காணப்படும் கோவில் சுவரில், 'வெங்கிட' என்னும்
எழுத்து, தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சோழர்
காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், பின், நாயக்கர்கள் காலத்தில்
சீரமைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. சோழர் காலத்தில்,
நடைமுறையிலிருந்த துல்லியமான நில அளவை முறையில், இன்றைக்கும் ஆலங்குடி
மகாஜனம் கிராமத்தில், விவசாய நிலங்கள் அமைந்திருக்கின்றன. அத்துடன், சிவன்
கோவில், நந்தி சிலையும் அவர்களது ஆட்சி அமைந்ததற்கு ஆதாரமாக உள்ளது.
வங்கனார், புதுக்கோட்டையிலுள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர் எனவும், பாண்டிய
மன்னனைப் பாடியதால் மதுரை மாவட்டம், திருமங்கலத்திலுள்ள ஆலங்குடியைச்
சேர்ந்தவர் எனவும், பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால், லால்குடி
தாலுக்காவிலுள்ள ஆலங்குடி மகாஜனம் என, அழைக்கப்படும் ஊரே, சங்க கால புலவர்
ஆலங்குடி வங்கனார் பிறந்த ஊர். இவ்வாறு அவர் கூறினார்.