மழையால் சரிந்தது மின் நுகர்வு 2,000 மெகாவாட் குறைந்தது
மழையால் சரிந்தது மின் நுகர்வு 2,000 மெகாவாட் குறைந்தது
ADDED : அக் 15, 2024 09:26 PM
சென்னை:சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, மாநிலத்தின் மின்நுகர்வு, 2,000 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலத்தில் அதிகரிக்கும்.
அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், செப்டம்பர் முதல் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தை விட குறையும்.
ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவு, கோடை காலத்தை போல வெயில் சுட்டெரித்தது. இதனால், வீடுகளில் பகலிலும், 'ஏசி' பயன்படுத்தியதால், மின்நுகர்வு, 17,500 மெகாவாட் வரை இருந்தது.
செப்டம்பருடன் காற்றாலை சீசன் முடிவடைந்ததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு சிரமம் ஏற்பட்டது. கடந்த வாரம், தென் மாவட்டங்களில் மழை பெய்ததால், மின்நுகர்வு சற்று குறைந்து, 16,000 மெகா வாட் என்றளவில் இருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லுாரிகள், பல தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு கருதி, மின் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மின்நுகர்வு, 2,000 மெகா வாட் வரை குறைந்து, 14,000 மெகா வாட்டாக உள்ளது.
இந்தாண்டு மே 2ல் மின்நுகர்வு, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.