UPDATED : நவ 10, 2026 05:56 PM
ADDED : நவ 10, 2026 05:53 PM
சென்னை: மின் சாதன பராமரிப்புக்காக மின் தடை செய்யப்படும் நேரம், காலை 10:00 முதல் மாலை, 3:00 மணியாக மாற்றப்பட்டுள்ளது.
துணை மின் நிலையங்கள், ‘டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்’ உள்ளிட்ட மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
இந்த பணி நடக்கும் இடங்களில், காலை 9:00 மணி முதல், மதியம், 2:00 வரை மின் தடை செய்யப்படுகிறது. இந்த விபரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. காலை 9:00 மணிக்கே வீடுகளில் மின் தடை செய்யப்படுவதால், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மின் தடை செய்யப்படும் நேரத்தை மாற்றி அமைக்குமாறு, பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மின் தடை செய்யப்படும் நேரத்தை காலை, 10:00 முதல், மாலை, 3:00 மணியாக மாற்றி, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது; இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், தொழிற்சாலைகள், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள் தவிர்த்த, மற்ற மின் இணைப்புகளில் சனிக்கிழமைகளில் பராமரிப்புக்காக மின் தடை செய்வதை தவிர்க்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
