வரும் மார்ச் 1 முதல் மே 31 வரை பரிமாற்ற முறையில் மின் கொள்முதல்
வரும் மார்ச் 1 முதல் மே 31 வரை பரிமாற்ற முறையில் மின் கொள்முதல்
ADDED : ஜன 01, 2025 10:25 PM
சென்னை:கோடை மின் தேவையை சமாளிக்க, மின் வாரியம் வரும் மார்ச் முதல் மே வரை, பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளது.
தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. வரும் மார்ச் முதல் கோடை காலம் துவங்குவதால், மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். அதை பூர்த்தி செய்ய, அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
இதற்காக, 'ஸ்வேப்பிங்' எனப்படும் பரிமாற்ற முறையில், மார்ச், 1 முதல் மே, 31 வரை மின் கொள்முதல் செய்ய, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் தேவையை பூர்த்தி செய்ய, சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. எனவே, மத்திய தொகுப்பு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின் கொள்முதல் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில், தினசரி மின் தேவை, 20,000 மெகா வாட்டை தாண்டும். அதை பூர்த்தி செய்ய, அதிக மின்சாரம் தேவை. அந்த காலத்தில் மின்சார சந்தையில், யூனிட் விலை, 10 ரூபாய்க்கு மேல் உள்ளது.
வட மாநிலங்களில், ஆண்டு துவக்கத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வது போக, உபரி மின்சாரம் அதிகம் உள்ளது. எனவே, அந்த மின்சாரத்தை பரிமாற்ற முறையில், தமிழகத்திற்கு கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
அதற்காக, மார்ச், 1 முதல் மே, 31 வரை, தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க விருப்பம் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரம், தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியதும், வரும் ஜூலை முதல் செப்., வரை திரும்ப வழங்கப்படும். இந்த முறையில் மின்சாரம் வாங்க பணம் செலவாகாது.
கொள்முதல் செய்யும் மின்சார அளவுடன், ஒன்று முதல் 5 சதவீதம் வரை, கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், குறைந்த சதவீதம் குறிப்பிடும் நிறுவனங்களிடம் இருந்து, பரிமாற்ற முறையில் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.