சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு பாதிரியாருக்கு முன்ஜாமின்
சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு பாதிரியாருக்கு முன்ஜாமின்
ADDED : செப் 19, 2024 11:03 PM
கோவை:கோவை, ரேஸ்கோர்ஸ், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ சர்ச்சில், பாதிரியராக பணியாற்றி வந்தவர், பிரின்ஸ் கால்வின். சர்ச்சில் நடந்த பிரார்த்தனையின் போது, பிற மதத்தினர் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஜூலை, 16ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
இதனால், டில்லி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, அவருக்கு முன்ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், 'குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது, தவறாமல் ஆஜராக வேண்டும்' என நிபந்தனை விதித்துள்ளது.